Affichage des articles dont le libellé est தமிழ் மொழி. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est தமிழ் மொழி. Afficher tous les articles

vendredi 21 juillet 2017

தமிழ் மொழி ஒரு செம்மொழி

நீண்ட இலக்கிய, இலக்கணப் பாரம்பரியத்தினைக் கொண்டதாகவும், எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்னும் இரு வழக்குகளைக் கொண்டதாகவும் உள்ள மொழி செம்மொழி என்று பொதுவாகக் கூறலாம். 

ஒரு மொழியின் சிறப்புக்கு அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்களும் கலைப்படைப்புக்களும் சான்றுகளாக உள்ளன. 


உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் பல எழுத்துவடிவங்கள் இல்லாமையால் அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியாமல் உள்ளன. 


சில மொழிகள் மிகப் பழமையானவையாகவும் இலக்கியத்தில் சிறந்து விளங்குவனவாகவும் உள்ளன. இவற்றில் கிரேக்கம், இலத்தீன், அரபு, சீனம், ஹீப்ரூ, பாரசீகம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் எட்டு மொழிகளே செம்மொழிகளாகக் கருதப்படுகின்றன. 


ஏனைய மொழிகளில் சாராததாகவும் தனித்துவம் கொண்டதாகவும் விளங்கும் தமிழ் மொழி செம்மொழியாக அடையாளப்படுத்தப்படுவதில் வியப்பில்லை. 


 தமிழ் மொழி தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே இன்றுவரை எழுத்துவழக்காகவும் பேச்சுவழக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. 


இது தமிழ் மொழிக்குரிய சிறப்பாகும். இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப்போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு தமிழ் மொழி ஆதாரமாக உள்ளது. 


தமிழ் 6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகின்றது. இந்திய வரலாற்றை அறிய தமிழ் மொழி அவசியமானது. 


 சங்க இலக்கியங்கள் தொடக்கம் இன்றுவரை இடையறாத ஒரு நீண்ட இலக்கியப் பாரம்பரியமும், செம்மைசார் இலக்கியமும், நாட்டார் இலக்கியமும் காணப்படுகின்றன. 


தமிழின் செம்மொழித் தகுதிக்கு சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களும் திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தௌ;ளாயிரம், இறையனார் களவியல் உரை போன்ற நூல்களும் உள்ளன. 


 செம்மையான இலக்கிய வளம், விழுமியம், பொதுமை மரபு, உயரிய சிந்தனை, பாரிய சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, அழிவில்லாத வாழ்வு, காலத்திற்கேற்ற புதுமை, என பல வகையிலும் சிறப்புடைய மொழியாகத் தமிழ் மொழி திகழ்கின்றது. 


அத்துடன் பிற மொழிகளோடு வளமாக வாழ்ந்து தான் சார்ந்த மொழிகள் பல அழிந்த பின்பும்கூட இன்றும் வளத்தோடு வாழுகின்ற ஒரே மொழியாகவும் தமிழ் மொழி காணப்படுகின்றது. 


 இந்தியாவின் பிற எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாத சிறப்புக் கூறுகளைக் கொண்டதாக எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் உள்ளன. இவை உயரிய இலக்கிய நயமும் வாய்க்கப் பெற்றவையாக அமைந்துள்ளன. 


உயிர்த்துடிப்புள்ள இலக்கியங்கள் இன்றும் உருவாகும் மொழியாகவும் தமிழ் மொழி உள்ளது. தமிழ் மொழியிலுள்ள திருக்குறள் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்தை அளிப்பதாக உள்ளது. 


திருக்குறள் சுமார் எண்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட உலக நூலாக உள்ளது. உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தை திருக்குறள் வகிக்கிறது. 


அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பால்களைக் கொண்டதாகவும் 1330 குறட்பாக்களை உள்ளடக்கியதாகவும் இந்நூல் அமைந்துள்ளது. 


 தமிழ் தொன்மையான மொழி என்பதற்குரிய சான்றுகளுள் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலும் அடங்கும். இது தமிழ்மொழிக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது. 


பிற இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஓராயிரம் ஆண்டுக்கு முன்னர் உருவான இலக்கியத்தைக் கொண்டது தமிழ் என்பதற்கு இந்நூலும் துணை புரிகின்றது. 


 சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற காவியங்களும் தமிழ் ஒரு செம்மொழி என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. இளங்கோவடிகளால் பாடப்பட்ட சிலப்பதிகாரம் சங்கப் பாடலொன்றில் வரும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. வட மொழி மரபினைத் தழுவி தமிழின் தனித்துவத்திற்கு படைக்கப்பட்ட உன்னத காப்பியமாக கம்பரது கம்பராமாயணம் கணிக்கப்படுகின்றது. 


 இந்திய மண்ணுக்குரிய சிறந்த இலக்கிய மரபாக தமிழ் இலக்கிய மரபு மட்டுமே உள்ளது. அத்துடன் சமஸ்கிருதம், இலத்தீன், சீனம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளின் இலக்கியங்களில் சிறந்தவற்றுக்கு இணையான தரம் வாய்ந்தது தமிழ்ச் செம்மொழி இலக்கியமாகும்.


 பல்வேறு பாடு பொருட்களைக் கொண்டதாகவும் முற்கால இந்திய இலக்கியங்களில் பொதுமைகளைப் பற்றியும் நிறையப் பாடியது தமிழிலக்கியம் மட்டுமே.


 உலகின் சிறந்த செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத்தெரிந்த உண்மையாகும்.


 பொருளாதார அரசியல் செயற்பாட்டினால் உலகில் ஆங்கிலம் தவிர பிறமொழிகளைத் தடுத்து நிறுத்தத்தக்கதாய் உலகமயமாக்கல் என்னும் பேர் இடர் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 


பிற மொழிக்கலப்பை தமிழின் தனித்துவம் கெடாத வகையில் ஏற்று தமிழை செம்மொழியாக, சிறப்புமிக்க மொழியாக வைத்திருப்பது நமது முக்கியமான கடமையாகும்.

mercredi 1 janvier 2014

தமிழ் மொழி


               தமிழ் மொழி



உலகில்  தோன்றிய மிகத் தொன்மையான மொழி தமிழ்

* தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழ் என்ற சொல்லிலே 3 இனத்திற்கும் பிரதிநித்துவம் கிடைக்கிறபடியாக அமைந்துள்ளதும் பெருமையே.

* தெலுங்கரும் கன்னடியரும் தமிழை அரவம் என்றும் தமிழரை அரவாலு என்றும் கூறுவர்.

* தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் மிகவும் புகழ்பெற்றவர் தேவநேயப் பாவாணர்.

* தமிழ் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா, பிஜிட்தீவு, மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது.

* இந்தியாவுக்கு வெளியே ஆட்சிமொழியாக அறவிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ்.

* முதலில் அச்சேறிய இந்திய மொழி தமிழ்

* மொழிகள் குறித்தும் மிகுதியாக ஆய்வு செய்த பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

* தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.

* தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். அவை 3 அதிகாரம், 27 இயல்கள், 1610 நூற்பாக்களும்,

தமிழரின் வாழ்வியலக்கணமான திருக்குறள் 3 பால்கள், 133 அதிகாரங்கள்,1330 குறள்களையும்,

சிலப்பதிகாரம் 3 காண்டம், 30 காதைகள் 5001 வரிகளையும், மணிமேகலை 30 காதைகள், 4755 வரிகளையும்,

சீவகசிந்தாமணி 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள்.

பெரிய புராணம் 2 காண்டங்கள், 13 சருக்கங்கையும், 4286 பாடல்களையும்,

கம்பராமாயணம் 6 காண்டங்கள், 118 படலங்கள், 10589 பாடல்களையும்,

நல்லாப்பிள்ளை பாரதம் 18 பருவங்கள், 11000 பாடல்களையும்.

 கந்தபுராணம் 6 காண்டம், 135 படலங்கள், 10345 பாடல்களையும்,

திருவிளையாடற்புராணம் 3 காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்களையும்.

சீறாப்புராணம் 3 காண்டங்கள், 92 படலங்கள், 5027 பாடல்களையும்,

இரட்சணிய யாத்திரிகம் 5 பருவங்கள், 47 படலங்கள்,3776 பாடல்களையும்,

இராவண காவியம் 5 காண்டம், 57 படலங்கள், 3106 விருத்தங்களையும்,

ஏசு காவியம் 5 பாகம், 149 அதிகாரம், 810 விருத்தங்கள், 2346 அகவலடிகளையும் கொண்டுள்ளது.

* தமிழில் உள்ள நூல்கள்  எல்லாம் அளவில் பெரியவை மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியனவாக உள்ளதையே தமிழின் தனிச்சிறப்பு எனலாம்.

* தமிழ் மொழி பக்தி மொழி, மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப் போற்றும் அன்புமொழி. உலகில் வேறு எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு பக்திப்பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ்.

* சைவம் பன்னிருதிருமுறையையும், வைணவம் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தையும் வழிபடும் மந்திரமாகப் போற்றி வணங்கிவருகின்றன. இது நெடுங்காலமாகப் பழக்கத்திலிருந்து வரும் தமிழர் வழிபாடு.

* தேவாரம்,திருவாசகம்,திருப்பாவை,திருவெம்பாவை, திருமொழி, திருவாய்மொழி, திருமந்திரம், திருவருட்பா, திருப்புகழ், தேசோமயானந்தம், சருவசமயக்கீர்த்தனைகள்,இசுலாமியத் தாயுமானவரான குணங்குடி மஸ்தானின் பராபரக் கண்ணிகள், இத்தகைய தெய்வப்புகழ்மொழிகள் உலகில் வேறு எந்தமொழியிலும் இல்லை என்பதே தமிழின் தனிசிறப்பு.

* வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் "தமிழ்' எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு "விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்' எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பனவாகும்.

* நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு' என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை'யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.

* "தமிழுக்கும் அமுதென்று பேர்'', தமிழ், தமிழ் எனக் கூற அது "அமிழ்ந்து' என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. ""தமிழுக்கும் அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்'' எனவும் கூறி, உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட கவிஞர் அவர். இதுகாறுங் கூறியவற்றால், தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு அறியலாம்.

* "தமிழ்" என்பதற்கு இனிமை என்றும் ஒரு பொருளுண்டு. இதனை இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்'' என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை மெய்ப்பிக்கும்.

* "பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள்'' என்ற தன் மனைவியை நோக்கிப் புலவர் ஒட்டக்கூத்தர் கூறியது இது:
"போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடி, சுவையாயிருக்கப் போகிறது?'' என்னே தமிழின் சுவை!

"அறம் வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தைக் கேளாதீர்கள், கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்'' எனப் பாடிய புலவனே கூறித் தடுத்தபோதும்,

அதனைக் கேட்க விரும்பிய நந்திவர்மன் கூறியது என்ன தெரியுமா?
""தமிழைச் சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன்'' என்பதே.

என்னே தமிழின் இனிமை! - இவ்வாறு தமிழின் சிறப்புகளை அடிக்கிக் கொண்டே பேகலாம்.

lundi 30 septembre 2013

தமிழ் மொழி

தமிழ் மொழி

தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும் பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.

தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலதிகமாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும், கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (diglossia) காணப்படுகின்றது

 இங்கே கொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும்.இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதை, கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும்

தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால், எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும், ஒன்றாகவே இருப்பதைக் காணலாம் தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும்.

தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது.

இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. சிங்கப்பூர் நாட்டிலும் நாடளாவிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது.

மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம் பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.