samedi 15 février 2014

உழவர்தினம்

போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என்று விமரிசையாகவும், குதூகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்தான் இந்த பொங்கல் திருவிழா. மார்கழிப் பெண் விடை பெற்று, தை மகளை வரவேற்கும் திருவிழாதான் பொங்கல் திருவிழா. தை முதல் நாளை தற்போது தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகவும் தமிழர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். மார்கழி மாதத்தின் கடைசி நாளைத்தான் போகிப் பண்டிகையாக கொண்டாடுகிறோம். இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும். இது நாளடைவில் மருவி போகி என்றாகி விட்டது. பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழியே போகியின் தத்துவம். வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தி, வீட்டை சுத்தப்படுத்தி அசுத்தங்களை போக்குவதால் அது போக்கிப் பண்டிகை என்றழைக்கப்படுகிறது. அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தாத்பர்யமாகும். இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசிவீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு வாசலில் மாவிலை கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர். அது மட்டுமில்லாது, வீடுகளிலும் அரிசிக்கோலம், பெயிண்டுகளால் கோலமிட்டு அழகுபடுத்துவது தமிழர் பண்பாடு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.