vendredi 21 juillet 2017

தமிழ் மொழி ஒரு செம்மொழி

நீண்ட இலக்கிய, இலக்கணப் பாரம்பரியத்தினைக் கொண்டதாகவும், எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்னும் இரு வழக்குகளைக் கொண்டதாகவும் உள்ள மொழி செம்மொழி என்று பொதுவாகக் கூறலாம். 

ஒரு மொழியின் சிறப்புக்கு அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்களும் கலைப்படைப்புக்களும் சான்றுகளாக உள்ளன. 


உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் பல எழுத்துவடிவங்கள் இல்லாமையால் அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியாமல் உள்ளன. 


சில மொழிகள் மிகப் பழமையானவையாகவும் இலக்கியத்தில் சிறந்து விளங்குவனவாகவும் உள்ளன. இவற்றில் கிரேக்கம், இலத்தீன், அரபு, சீனம், ஹீப்ரூ, பாரசீகம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் எட்டு மொழிகளே செம்மொழிகளாகக் கருதப்படுகின்றன. 


ஏனைய மொழிகளில் சாராததாகவும் தனித்துவம் கொண்டதாகவும் விளங்கும் தமிழ் மொழி செம்மொழியாக அடையாளப்படுத்தப்படுவதில் வியப்பில்லை. 


 தமிழ் மொழி தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே இன்றுவரை எழுத்துவழக்காகவும் பேச்சுவழக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. 


இது தமிழ் மொழிக்குரிய சிறப்பாகும். இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப்போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு தமிழ் மொழி ஆதாரமாக உள்ளது. 


தமிழ் 6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகின்றது. இந்திய வரலாற்றை அறிய தமிழ் மொழி அவசியமானது. 


 சங்க இலக்கியங்கள் தொடக்கம் இன்றுவரை இடையறாத ஒரு நீண்ட இலக்கியப் பாரம்பரியமும், செம்மைசார் இலக்கியமும், நாட்டார் இலக்கியமும் காணப்படுகின்றன. 


தமிழின் செம்மொழித் தகுதிக்கு சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களும் திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தௌ;ளாயிரம், இறையனார் களவியல் உரை போன்ற நூல்களும் உள்ளன. 


 செம்மையான இலக்கிய வளம், விழுமியம், பொதுமை மரபு, உயரிய சிந்தனை, பாரிய சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, அழிவில்லாத வாழ்வு, காலத்திற்கேற்ற புதுமை, என பல வகையிலும் சிறப்புடைய மொழியாகத் தமிழ் மொழி திகழ்கின்றது. 


அத்துடன் பிற மொழிகளோடு வளமாக வாழ்ந்து தான் சார்ந்த மொழிகள் பல அழிந்த பின்பும்கூட இன்றும் வளத்தோடு வாழுகின்ற ஒரே மொழியாகவும் தமிழ் மொழி காணப்படுகின்றது. 


 இந்தியாவின் பிற எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாத சிறப்புக் கூறுகளைக் கொண்டதாக எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் உள்ளன. இவை உயரிய இலக்கிய நயமும் வாய்க்கப் பெற்றவையாக அமைந்துள்ளன. 


உயிர்த்துடிப்புள்ள இலக்கியங்கள் இன்றும் உருவாகும் மொழியாகவும் தமிழ் மொழி உள்ளது. தமிழ் மொழியிலுள்ள திருக்குறள் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்தை அளிப்பதாக உள்ளது. 


திருக்குறள் சுமார் எண்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட உலக நூலாக உள்ளது. உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தை திருக்குறள் வகிக்கிறது. 


அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பால்களைக் கொண்டதாகவும் 1330 குறட்பாக்களை உள்ளடக்கியதாகவும் இந்நூல் அமைந்துள்ளது. 


 தமிழ் தொன்மையான மொழி என்பதற்குரிய சான்றுகளுள் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலும் அடங்கும். இது தமிழ்மொழிக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது. 


பிற இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஓராயிரம் ஆண்டுக்கு முன்னர் உருவான இலக்கியத்தைக் கொண்டது தமிழ் என்பதற்கு இந்நூலும் துணை புரிகின்றது. 


 சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற காவியங்களும் தமிழ் ஒரு செம்மொழி என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. இளங்கோவடிகளால் பாடப்பட்ட சிலப்பதிகாரம் சங்கப் பாடலொன்றில் வரும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. வட மொழி மரபினைத் தழுவி தமிழின் தனித்துவத்திற்கு படைக்கப்பட்ட உன்னத காப்பியமாக கம்பரது கம்பராமாயணம் கணிக்கப்படுகின்றது. 


 இந்திய மண்ணுக்குரிய சிறந்த இலக்கிய மரபாக தமிழ் இலக்கிய மரபு மட்டுமே உள்ளது. அத்துடன் சமஸ்கிருதம், இலத்தீன், சீனம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளின் இலக்கியங்களில் சிறந்தவற்றுக்கு இணையான தரம் வாய்ந்தது தமிழ்ச் செம்மொழி இலக்கியமாகும்.


 பல்வேறு பாடு பொருட்களைக் கொண்டதாகவும் முற்கால இந்திய இலக்கியங்களில் பொதுமைகளைப் பற்றியும் நிறையப் பாடியது தமிழிலக்கியம் மட்டுமே.


 உலகின் சிறந்த செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத்தெரிந்த உண்மையாகும்.


 பொருளாதார அரசியல் செயற்பாட்டினால் உலகில் ஆங்கிலம் தவிர பிறமொழிகளைத் தடுத்து நிறுத்தத்தக்கதாய் உலகமயமாக்கல் என்னும் பேர் இடர் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 


பிற மொழிக்கலப்பை தமிழின் தனித்துவம் கெடாத வகையில் ஏற்று தமிழை செம்மொழியாக, சிறப்புமிக்க மொழியாக வைத்திருப்பது நமது முக்கியமான கடமையாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.