mercredi 1 janvier 2014

தமிழ் மொழி


               தமிழ் மொழி



உலகில்  தோன்றிய மிகத் தொன்மையான மொழி தமிழ்

* தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழ் என்ற சொல்லிலே 3 இனத்திற்கும் பிரதிநித்துவம் கிடைக்கிறபடியாக அமைந்துள்ளதும் பெருமையே.

* தெலுங்கரும் கன்னடியரும் தமிழை அரவம் என்றும் தமிழரை அரவாலு என்றும் கூறுவர்.

* தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் மிகவும் புகழ்பெற்றவர் தேவநேயப் பாவாணர்.

* தமிழ் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா, பிஜிட்தீவு, மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது.

* இந்தியாவுக்கு வெளியே ஆட்சிமொழியாக அறவிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ்.

* முதலில் அச்சேறிய இந்திய மொழி தமிழ்

* மொழிகள் குறித்தும் மிகுதியாக ஆய்வு செய்த பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

* தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.

* தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். அவை 3 அதிகாரம், 27 இயல்கள், 1610 நூற்பாக்களும்,

தமிழரின் வாழ்வியலக்கணமான திருக்குறள் 3 பால்கள், 133 அதிகாரங்கள்,1330 குறள்களையும்,

சிலப்பதிகாரம் 3 காண்டம், 30 காதைகள் 5001 வரிகளையும், மணிமேகலை 30 காதைகள், 4755 வரிகளையும்,

சீவகசிந்தாமணி 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள்.

பெரிய புராணம் 2 காண்டங்கள், 13 சருக்கங்கையும், 4286 பாடல்களையும்,

கம்பராமாயணம் 6 காண்டங்கள், 118 படலங்கள், 10589 பாடல்களையும்,

நல்லாப்பிள்ளை பாரதம் 18 பருவங்கள், 11000 பாடல்களையும்.

 கந்தபுராணம் 6 காண்டம், 135 படலங்கள், 10345 பாடல்களையும்,

திருவிளையாடற்புராணம் 3 காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்களையும்.

சீறாப்புராணம் 3 காண்டங்கள், 92 படலங்கள், 5027 பாடல்களையும்,

இரட்சணிய யாத்திரிகம் 5 பருவங்கள், 47 படலங்கள்,3776 பாடல்களையும்,

இராவண காவியம் 5 காண்டம், 57 படலங்கள், 3106 விருத்தங்களையும்,

ஏசு காவியம் 5 பாகம், 149 அதிகாரம், 810 விருத்தங்கள், 2346 அகவலடிகளையும் கொண்டுள்ளது.

* தமிழில் உள்ள நூல்கள்  எல்லாம் அளவில் பெரியவை மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியனவாக உள்ளதையே தமிழின் தனிச்சிறப்பு எனலாம்.

* தமிழ் மொழி பக்தி மொழி, மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப் போற்றும் அன்புமொழி. உலகில் வேறு எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு பக்திப்பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ்.

* சைவம் பன்னிருதிருமுறையையும், வைணவம் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தையும் வழிபடும் மந்திரமாகப் போற்றி வணங்கிவருகின்றன. இது நெடுங்காலமாகப் பழக்கத்திலிருந்து வரும் தமிழர் வழிபாடு.

* தேவாரம்,திருவாசகம்,திருப்பாவை,திருவெம்பாவை, திருமொழி, திருவாய்மொழி, திருமந்திரம், திருவருட்பா, திருப்புகழ், தேசோமயானந்தம், சருவசமயக்கீர்த்தனைகள்,இசுலாமியத் தாயுமானவரான குணங்குடி மஸ்தானின் பராபரக் கண்ணிகள், இத்தகைய தெய்வப்புகழ்மொழிகள் உலகில் வேறு எந்தமொழியிலும் இல்லை என்பதே தமிழின் தனிசிறப்பு.

* வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் "தமிழ்' எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு "விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்' எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பனவாகும்.

* நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு' என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை'யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.

* "தமிழுக்கும் அமுதென்று பேர்'', தமிழ், தமிழ் எனக் கூற அது "அமிழ்ந்து' என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. ""தமிழுக்கும் அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்'' எனவும் கூறி, உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட கவிஞர் அவர். இதுகாறுங் கூறியவற்றால், தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு அறியலாம்.

* "தமிழ்" என்பதற்கு இனிமை என்றும் ஒரு பொருளுண்டு. இதனை இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்'' என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை மெய்ப்பிக்கும்.

* "பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள்'' என்ற தன் மனைவியை நோக்கிப் புலவர் ஒட்டக்கூத்தர் கூறியது இது:
"போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடி, சுவையாயிருக்கப் போகிறது?'' என்னே தமிழின் சுவை!

"அறம் வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தைக் கேளாதீர்கள், கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்'' எனப் பாடிய புலவனே கூறித் தடுத்தபோதும்,

அதனைக் கேட்க விரும்பிய நந்திவர்மன் கூறியது என்ன தெரியுமா?
""தமிழைச் சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன்'' என்பதே.

என்னே தமிழின் இனிமை! - இவ்வாறு தமிழின் சிறப்புகளை அடிக்கிக் கொண்டே பேகலாம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.