dimanche 16 février 2014

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை
 தை முதல் நாளன்று தைப் பொங்கல் அல்லது பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும். வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள். பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. உழவர்கள் இந்தப் பண்டிகையை சிற்பாக கொண்டாடுவார்கள். வருடம் முழுவதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் பகலவனுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு. தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்றநம்பிக்கையோடு இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 
பொங்கல் தினத்தன்று அடுப்பில் பொங்கல் பானை வைக்கப்பட்டு (முன் காலத்தில் மண்பானை உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின் வெண்கலத்தால் செய்யப்பட்ட வெண்கலப்பானை உபயோகப்படுத்தப்பட்டது. இப்போது அதுவும் போய் பெரும்பாலான இடங்களில் குக்கரே பயன்படுத்தப்படுகிறது) அதற்கு பொட்டு வைத்து, பானையைச் சுற்றி மஞ்சள் கட்டி அதில் பொங்கல் வைப்பார்கள். பொங்கல், பொங்கி வந்ததும் குடும்பத்தினர் அனைவரும் பொங்கலோ பொங்கல் என கூறி பொங்கலை வரவேற்பர். தை மாதம் பிறக்கும் போது பொங்கல் பானை வைக்கப்படுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். சில சமயம் மாதம் அதிகாலைபிறக்கும். சில சமயம் மதியமோ அல்லது மாலையோ மாதம் பிறக்கும். சில சமயம் இரவு நேரத்தில் கூட மாதம் பிறக்கும். மாதம் பிறக்கும் நேரப்படி பொங்கல் பானை வைக்கப்படும்.பொங்கலின் சிறப்பம்சம் கரும்பும், மஞ்சள் கொத்தும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கரும்பும், மஞ்சள் கொத்தும் விற்பனை செய்யப்படுவதை காணலாம். பொங்கலன்று பால் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை தயாரிக்கப்பட்டு சூரியனுக்கு நிவேதனம் செய்யப்படும். கரும்பும் நிவேதனப் பொருளில் முக்கிய இடம் பெறும். சூரியனுக்கு நிவேதனம் என்பதால் வீட்டின் மாடியிலோ அல்லது திறந்த வெளி பகுதியிலோ தேரில் சூரியன் வருவது போல் கோலமிடட்டு அதற்கு அருகில்நிவேதனப் பொருட்கள் வைக்கப்பட்டு சூரியனுக்கு பூஜையும், நிவேதனமும் நடைபெறும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.