jeudi 16 janvier 2014

நாம் வாழும் நாடு ஜேர்மனி

 ஜேர்மனி என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. ஜெர்மனியின் பரப்பளவு 357,021 கிமீ 82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடாகவும், மூன்றாவது அதிகம் புலம் பெயர்ந்த மக்களைக் கொண்டதாகவும் திகழ்கிறது
ஜெர்மனி கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி என இரண்டு பகுதிகளாக 1949 ஆம் ஆண்டு முதல் 3.அக்டோபர்,1990 வரை இருந்தது. கிழக்கு-ஜெர்மனிக்கு கிழக்கு-பெர்லின் தலைநகரமாகவும் மேற்கு-ஜெர்மனிக்கு பான்(Bonn) தலைநகரமாகவும் இருந்தன. மேற்கு-பெர்லினை கிழக்கு-பெர்லின் மற்றும் கிழக்கு-ஜெர்மனில் இருந்து பிரிக்க 1961 இல் பெர்லின் சுவர் கட்டப்பட்டது. 1989 இல் சுவர் உடைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஜெர்மனிக்கு பெர்லின் தலைநகரம் ஆனது.ஜெர்மனி இப்போது 16 மாநிலங்களை கொண்ட ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாகும். இதன் தலைநகரம் பெர்லின். இதுவே இந்நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.
ஜெர்மானியா என அறியப்பட்ட பிரதேசத்தில் கி.பி. 100க்கு முன்னரே ஜெர்மானிக் மக்கள் குடியேறியமைக்கு ஆதாரங்கள் உள்ளன. குடிப்பெயர்வுக் காலப்பகுதியில், ஜெர்மானிக் குழுக்கள் மேலும் தென்பகுதிக்குப் பரவியதோடு ஐரோப்பாவெங்கும் வெற்றிகரமான ராச்சியங்களை ஏற்படுத்தினர். 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஜெர்மனியப் பகுதிகள் புனித உரோமப் பேரரசின் மையப்பகுதிகளாக இருந்தன. 16ம் நூற்றாண்டில் வடக்கு ஜெர்மன் பகுதிகள் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தின் மத்திய நிலையமாக விளங்கியது. எனினும், தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ரோமன் கத்தோலிக்கப் பகுதிகளாகவே இருந்தன. இதன் காரணமாக முப்பதாண்டுப் போர் ஏற்பட்டதோடு, கத்தோலிக்க்- புரட்டஸ்தாந்து பிரிவினையின் ஆரம்பமாகவும் அமைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, ஜெர்மானிய சமுதாயத்தின் பண்பைத் தீர்மானிப்பதாகவும் இது இருந்து வருகிறது.நெப்போலியப் போர்களின் போது, ஜெர்மானியப் பகுதிகளில் நாட்டுப் பற்று எழுச்சிபெற்றது. இதன் மூலம்,1871ல், புருசியாவைத் தலைமையாகக் கொண்டு, பெரும்பாலான ஜெர்மானியப் பகுதிகள் ஜெர்மன் பேரரசாக எழுச்சி பெற்றன.

1918-1919 ஜெர்மானியப் புரட்சி மற்றும் முதல் உலகப் போரில் சரணடைவு என்பவற்றைத் தொடர்ந்து, 1918ல், பாராளுமன்ற வைமார் குடியரசு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அதன் சில பகுதிகள் வெர்செயில்ஸ் உடன்படிக்கையின்படி பிரித்தெடுக்கப்பட்டன. இக்காலப்பகுதியில், விஞ்ஞான மற்றும் கலைத் துறைகளில், பல முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக 1933ல் மூன்றாவது முடியாட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் பின்பு நாட்டில் நாசிசக் கொள்கைகள் பரவின இதனால் இரண்டாம் உலகப்போரும் மூண்டது. 1945ன் பின், ஜெர்மனி நேச நாடுகளால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவை கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி என அழைக்கப்பட்டன. 1990ல் ஜெர்மனி மீண்டும் ஒன்றிணைந்தது.

1957ல் ஐரோப்பிய சமூகத்தை உருவாக்குவதில் ஜெர்மனியும் பங்கு கொண்டது. இது 1993ல், ஐரோப்பிய ஒன்றியமாக மாறியது. இது சென்ஜென் பகுதியின் ஒரு பகுதியாகவும், 1999இலிருந்து, யூரோ பகுதியின் ஒரு உருப்பினராகவும் ஆனது. ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நேட்டோ, G8, G20, பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்கான அமைப்பு மற்றும் ஐரோப்பியச் சம்மேளனம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான, 2011-2012 காலப் பகுதிக் கான தற்காலிக உறுப்பினராகவும் உள்ளது.

ஜெர்மனி, உத்தேச மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் நான்காவது பாரிய பொருளாதார நாடாகவும், கொள்வனவுச் சக்தி அடிப்படையில், ஐந்தாம் இடத்திலும் உள்ளது. ஜெர்மனி உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும், மூன்றாவது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இது ஒரு உயர் வாழ்க்கைத்தரம் கொண்ட நாடாகவும், சமூகப் பாதுகாப்புடைய நாடாகவும் காணப்படுகிறது. ஜெர்மனி உலகின் மிகப் பழைமை வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு முறைமையையும் கொண்டுள்ளது. ஜெர்மனியில் பல சிறந்த தத்துவஞானிகள், இசையமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும், இதன் கலாசார மற்றும் அரசியல் வரலாறும் சிறப்பானதாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.