jeudi 29 juin 2017

நனோ தொழிநுட்பம் ஓர் அறிமுகம்

நனோ தொழினுட்பம் இன்று பல்வேறு துறைகளிலும் தடம்பதித்து வருகின்ற ஒன்றாகக் காணப்படுவதுடன் எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தொழிநுட்ப துறையாகவும் உருவாகி வருகின்றது.  

இலத்திரணியல் துறை, உணவுற்பத்தி, மருத்துவம் எனப்பல்வேறு துறைகளிலும் நனோ தொழினுட்பம் ஒரு பயன்பாடுடையதாக மாறிவருகின்றது.

நனோ தொழில்நுட்பம் என்பது 100 நனோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புக்களைக் கொண்டு, அச்சிறு அளவாக அமையும்பொழுது சிறப்பாக வெளிப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கப்படும் கருவிகளும் அப்பொருட் பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும் நனோ தொழில்நுட்பம் என அழைக்கப்படுகின்றது.



நீளத்தை அளவிடும் அலகுகளில் கிலோமீற்றர், மீற்றர், சென்ரிமீற்றர், மில்லிமீற்றர் என்பன காணப்படுகின்றன. 

இவற்றை விட மிக நுண்ணிய அளவீடுகளை எடுப்பதற்கு மைக்ரோமீட்டர் மற்றும் நனோமீட்டர் எனபன பயன்படுத்தப்படுகின்றன.

ஒருநனோமீட்டர் என்பது ஒரு மீட்டரின் பில்லியனில் ஒரு பங்கு (1/1,000,000,000 or    1 nm = 0.000000001 meter)  அல்லது பகுதியாகக் காணப்படுகின்றது.

 இதனை மில்லிமீற்றரின் பகுதியாகக் கூறுவதாயின் மில்லிமீட்டரின் ஒரு மில்லியனில் ஒரு பகுதியாகும். 

நனோமீட்டரானது nmஎனும் அலகிலேயே அளக்கப்படுகின்றது பொதுவாக ஒரு மனிதர்களின் தலைமுடியானது 60000 நனோமீட்டர் தடிப்பையுடையது. 

அதேவேளை மனிதனுடைய மரபணு மூலக்கூறானது 2-12 நனோமீற்றர்களாகும்.

 இத்தகைய நனோ தொழினுட்பத்திற்கான முன்னோடிகளாக உரோமர்களே காணப்படுகின்றார்கள். 

இது பற்றிய எண்ணக்கூற்றை விஞ்ஞானரீதியாக முன்வைத்தவர் பௌதீகவியலாளரான றிச்சர்ட் பேமன் (Richard Feynman) என்பவராவர். 

நனோ தொழில்நுட்பம் என்ற சொல்லை முதன் முதலில் டோக்கியோ பல்கலைக்கழக அறிவியல்துறைப் பேராசிரியர் நொரியா தனிகுச்சி (Norio Taniguchi)  என்பவர் 1974 இல்  அறிமுகப்படுத்தினார்.  

1980 களின் பின்னர் நனோ தொழல்நுட்பம் வளர்ச்சியடையத் தொடங்கியது.

நனோ எனும் பெயரை தமது வர்த்தகப் பெயராகக் கொண்டிருக்கும் பெரும்பாலான உற்பத்திப் பொருட்கள் இவ்வாறு நனோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவையாகும். 

இலத்திரணியல் துறையைப் பொறுத்தவரை நனோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் ரான்சிற்றர்களின் வருகையால் தகவல் தொழில்நுட்பத்துறையில் பாரிய மாற்றங்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம். 

இதனால் நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசி, மற்றும் கணணிகள் கூட மிகவும் நுண்ணிய அளவில் தயாரிக்கப்படக்கூடும்.

    மேலும் நனோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் எந்தவொரு பொருட்களையும் நீண்டகாலத்திற்குப் பேணிப் பாதுகாப்பதற்கு உதவியாக அமைகின்றது.  

இவை தவிர விண்வெளி ஓடங்களில் நனோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இலத்திரணியல் பாகங்கள் மிகவும் நுண்ணியதாக அமைக்கப்படுகின்றன. 

இவை விண்வெளி ஓடத்தின் பாரத்தைக் குறைப்பதுடன் குறைந்தளவிலான இடத்தையும் உள்ளடக்குகின்றன.

  மருத்துவத்துறையைப் பொறுத்தவரை நனோ தொழில்நுட்பமானது பல்வேறு நன்மைகளை அளிக்கின்றது. 

இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மாத்திரைகளை உட்கொண்ட மறுகணமே வியாதி தீரக்கூடிய தன்மை காணப்படுகின்றது. 

அதுமட்டுமன்றி நனோ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் நுண்ணிய ரோபோக்களை உடலினுள் செலுத்தி நோய்கள் மற்றும் நோய்க்கலங்களைக் கண்டறியும் முயற்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன.

 உறுதிமிக்க கட்டடப் பொருட்கள் மற்றும் டயர்கள் என்பனவும் நனோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றன. 

இவ்வாறு பல்வேறு விதத்தில் வளர்ந்து வருகின்ற நனோ தொழில்நுட்பத்துறையில்  பல்வேறு விதமான ஆய்வுகளில் பல நிறுவனங்கள் தமது முதலீடுகளை இட்டுள்ளன.




இத்தகைய பல்வேறு நன்மை பயக்கின்ற நனோ தொழில்நுட்பத்தின் மூலம் அபாயங்களும் இல்லாமலில்லை. 

நனோ தொழில்நுட்பச் சாலைகளில் தொழில்புரியும் தொழிலாளர்களால் நனோ துணிக்கைகள் உள்ளெடுக்கப்படுவதனால் பாரிய அபாயங்களை ஏற்படுத்தலாம். 

ஏனெனில் நனோத் துணிக்கைகள் நச்சுத்தன்மையானவை. இவை மனிதனால் உள்ளெடுக்கப்படுகின்றபோது உயிராபத்தைக்கூட ஏற்படுத்தலாம்.

 மேலும் நனோ தொழில்நுட்பத்தின் மூலம் திறன்வாய்ந்ததும், பருமனில் சிறியதுமான ஆயுதங்களை தயாரிக்கமுடியும்.

 இது எதிர்காலத்தில் உலகரீதியாக பல்வேறு அச்சுறுத்தலை உண்டாக்குவதுடன் மனித குலத்தை அழிவடையச் செய்வதற்குரிய ஒரு மூலமாகவும் அமையும். 

எனவே எந்தவொரு நவீன கண்டு பிடிப்புகளும் பல்வேறு பயனுள்ளவையாக இருப்பதுடன், அவற்றிலிருந்து தீங்கு விளைவிக்கக்கூடிய தன்மைகளும் காணப்படுகின்றன. 

எனவே எந்தவொரு தொழில்நுட்பமும் மனிதனின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு சர்வதேச ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.