mardi 1 août 2017

டெங்கு நுளம்புகள்

இலங்கையில் தற்போது 140 வகையான நுளம்பு இனங்கள் காணப்படுவதுடன் ஈடிஸ் ஈஜிப்டை மற்றும் ஈடிஸ் எல்பொபிக்டஸ் ஆகிய இரண்டு நுளம்பு வகைகள் மாத்திரம் டெங்கு நோய் வைரஸை பரப்புவதில் பங்களிப்புச் செய்கிறது. இவ் இரண்டு நுளம்பு வகைகளை அவற்றின் உடம்பில் காணப்படும் அடையாளம் காரணமாக இலகுவில் இனங் காணலாம். .ஈடிஸ் நுளம்புகளின் வாழ்க்கைச் சக்கரத்தில் நீரியல் சந்தர்ப்பம் (முட்டை, குடம்பி, கூட்டுப்புழு) மற்றும் தரைச் சந்தர்ப்பம் (நிறைவுடலி) என்பன காணப்படுவதுடன் பெண் நுளம்புகள் நீருடன் கூடிய கொல்கலன்களில் நீர் மட்டத்திற்கு சற்று மேலே ஈரலிப்பான மேற்பட்டையில் முட்டையினை  ஒட்டுவதுடன் அம் முட்டை நீருடன் மோதுகின்ற போது (மழை அல்லது வேறு ஒரு முறையினால் நீர் ஒன்றுசேர்தல் மூலம்) முட்டைகள் வெடித்து குடம்பி சந்தர்ப்பமாக மாறும்.

இந் நுளம்பு குடம்பிகள் நீரிலுள்ள கூட்டுப்பொருள் மற்றும் சிறிய நுண் அங்கிகள் என்பவற்றை உணவாக உட்கொண்டு 1ஆம் குடம்பி சந்தர்ப்பம் முதல் 4ஆம் குடம்பி சந்தர்ப்பம் வரை வருகின்றன. குடம்பியானது தேவையான உடல் பருமனை அடைந்ததன் பின்னர் மற்றும் தேவையான சக்தினைப் பெற்றுக்கொண்ட பின்னர் 4ஆம் குடம்பி சந்தர்ப்பத்திலிருந்து கூட்டுப்புழு சந்தர்ப்பத்திற்கு மாற்றமடைகிறது. இவ் வழ்க்கைச் சக்கரத்தினைப் பூரணப்படுத்துவதற்காக 8-10 தினங்கள் செலவழிப்பதுடன் இது குடம்பி தனது உணவு உட்கொள்ளும் அளவு மீது தங்கியுள்ளது.ஈடிஸ் நுளம்பின் முட்டைகளுக்கு பாதகமான சூழல் மற்றும் காலநிலை நிலைமைகளினைப் பொறுத்துக்கொண்டு பல மாதங்கள் சாகாமல் வாழ்வதற்குரிய விசேட ஆற்றலைக் கொண்டுள்ளதுடன் இதன் காரணமாக நுளம்பின் குடம்பி சந்தர்ப்பம், கூட்டுப்புழு சந்தர்ப்பம் மற்றும் நிறைவுடலி சந்தர்ப்பங்கள் அழிக்கப்பட்டாலும் நுளம்பின் முட்டைகள் தேங்கியுள்ள கொல்கலனொன்றில் நீர் விழுந்ததும் முட்டை வெடித்து மீண்டும் நுளம்புகள் பெருகக் கூடிய ஆற்றல் காணப்படுகிறது. துரதிஷ்டவசமாக கொல்கலன்களில் ஒட்டியுள்ள முட்டைகளை அழிப்பதற்கான விசேடமான ஒரு முறைமை காணப்படவில்லை. நுளம்பின் வாழ்க்கைச் சக்கரத்தில் காணப்படும். 

இவ்வாறான இயல்புகளின் மாற்றங்களின் காரணமாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் டெங்கு நுளம்புகளை இல்லாதொழித்தலானது இலகுவான காரியமல்ல.

vendredi 21 juillet 2017

தமிழ் மொழி ஒரு செம்மொழி

நீண்ட இலக்கிய, இலக்கணப் பாரம்பரியத்தினைக் கொண்டதாகவும், எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்னும் இரு வழக்குகளைக் கொண்டதாகவும் உள்ள மொழி செம்மொழி என்று பொதுவாகக் கூறலாம். 

ஒரு மொழியின் சிறப்புக்கு அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்களும் கலைப்படைப்புக்களும் சான்றுகளாக உள்ளன. 


உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் பல எழுத்துவடிவங்கள் இல்லாமையால் அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியாமல் உள்ளன. 


சில மொழிகள் மிகப் பழமையானவையாகவும் இலக்கியத்தில் சிறந்து விளங்குவனவாகவும் உள்ளன. இவற்றில் கிரேக்கம், இலத்தீன், அரபு, சீனம், ஹீப்ரூ, பாரசீகம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் எட்டு மொழிகளே செம்மொழிகளாகக் கருதப்படுகின்றன. 


ஏனைய மொழிகளில் சாராததாகவும் தனித்துவம் கொண்டதாகவும் விளங்கும் தமிழ் மொழி செம்மொழியாக அடையாளப்படுத்தப்படுவதில் வியப்பில்லை. 


 தமிழ் மொழி தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே இன்றுவரை எழுத்துவழக்காகவும் பேச்சுவழக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. 


இது தமிழ் மொழிக்குரிய சிறப்பாகும். இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப்போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு தமிழ் மொழி ஆதாரமாக உள்ளது. 


தமிழ் 6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகின்றது. இந்திய வரலாற்றை அறிய தமிழ் மொழி அவசியமானது. 


 சங்க இலக்கியங்கள் தொடக்கம் இன்றுவரை இடையறாத ஒரு நீண்ட இலக்கியப் பாரம்பரியமும், செம்மைசார் இலக்கியமும், நாட்டார் இலக்கியமும் காணப்படுகின்றன. 


தமிழின் செம்மொழித் தகுதிக்கு சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களும் திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தௌ;ளாயிரம், இறையனார் களவியல் உரை போன்ற நூல்களும் உள்ளன. 


 செம்மையான இலக்கிய வளம், விழுமியம், பொதுமை மரபு, உயரிய சிந்தனை, பாரிய சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, அழிவில்லாத வாழ்வு, காலத்திற்கேற்ற புதுமை, என பல வகையிலும் சிறப்புடைய மொழியாகத் தமிழ் மொழி திகழ்கின்றது. 


அத்துடன் பிற மொழிகளோடு வளமாக வாழ்ந்து தான் சார்ந்த மொழிகள் பல அழிந்த பின்பும்கூட இன்றும் வளத்தோடு வாழுகின்ற ஒரே மொழியாகவும் தமிழ் மொழி காணப்படுகின்றது. 


 இந்தியாவின் பிற எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாத சிறப்புக் கூறுகளைக் கொண்டதாக எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் உள்ளன. இவை உயரிய இலக்கிய நயமும் வாய்க்கப் பெற்றவையாக அமைந்துள்ளன. 


உயிர்த்துடிப்புள்ள இலக்கியங்கள் இன்றும் உருவாகும் மொழியாகவும் தமிழ் மொழி உள்ளது. தமிழ் மொழியிலுள்ள திருக்குறள் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்தை அளிப்பதாக உள்ளது. 


திருக்குறள் சுமார் எண்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட உலக நூலாக உள்ளது. உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தை திருக்குறள் வகிக்கிறது. 


அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பால்களைக் கொண்டதாகவும் 1330 குறட்பாக்களை உள்ளடக்கியதாகவும் இந்நூல் அமைந்துள்ளது. 


 தமிழ் தொன்மையான மொழி என்பதற்குரிய சான்றுகளுள் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலும் அடங்கும். இது தமிழ்மொழிக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது. 


பிற இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஓராயிரம் ஆண்டுக்கு முன்னர் உருவான இலக்கியத்தைக் கொண்டது தமிழ் என்பதற்கு இந்நூலும் துணை புரிகின்றது. 


 சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற காவியங்களும் தமிழ் ஒரு செம்மொழி என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. இளங்கோவடிகளால் பாடப்பட்ட சிலப்பதிகாரம் சங்கப் பாடலொன்றில் வரும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. வட மொழி மரபினைத் தழுவி தமிழின் தனித்துவத்திற்கு படைக்கப்பட்ட உன்னத காப்பியமாக கம்பரது கம்பராமாயணம் கணிக்கப்படுகின்றது. 


 இந்திய மண்ணுக்குரிய சிறந்த இலக்கிய மரபாக தமிழ் இலக்கிய மரபு மட்டுமே உள்ளது. அத்துடன் சமஸ்கிருதம், இலத்தீன், சீனம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளின் இலக்கியங்களில் சிறந்தவற்றுக்கு இணையான தரம் வாய்ந்தது தமிழ்ச் செம்மொழி இலக்கியமாகும்.


 பல்வேறு பாடு பொருட்களைக் கொண்டதாகவும் முற்கால இந்திய இலக்கியங்களில் பொதுமைகளைப் பற்றியும் நிறையப் பாடியது தமிழிலக்கியம் மட்டுமே.


 உலகின் சிறந்த செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத்தெரிந்த உண்மையாகும்.


 பொருளாதார அரசியல் செயற்பாட்டினால் உலகில் ஆங்கிலம் தவிர பிறமொழிகளைத் தடுத்து நிறுத்தத்தக்கதாய் உலகமயமாக்கல் என்னும் பேர் இடர் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 


பிற மொழிக்கலப்பை தமிழின் தனித்துவம் கெடாத வகையில் ஏற்று தமிழை செம்மொழியாக, சிறப்புமிக்க மொழியாக வைத்திருப்பது நமது முக்கியமான கடமையாகும்.

jeudi 29 juin 2017

நனோ தொழிநுட்பம் ஓர் அறிமுகம்

நனோ தொழினுட்பம் இன்று பல்வேறு துறைகளிலும் தடம்பதித்து வருகின்ற ஒன்றாகக் காணப்படுவதுடன் எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தொழிநுட்ப துறையாகவும் உருவாகி வருகின்றது.  

இலத்திரணியல் துறை, உணவுற்பத்தி, மருத்துவம் எனப்பல்வேறு துறைகளிலும் நனோ தொழினுட்பம் ஒரு பயன்பாடுடையதாக மாறிவருகின்றது.

நனோ தொழில்நுட்பம் என்பது 100 நனோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புக்களைக் கொண்டு, அச்சிறு அளவாக அமையும்பொழுது சிறப்பாக வெளிப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கப்படும் கருவிகளும் அப்பொருட் பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும் நனோ தொழில்நுட்பம் என அழைக்கப்படுகின்றது.



நீளத்தை அளவிடும் அலகுகளில் கிலோமீற்றர், மீற்றர், சென்ரிமீற்றர், மில்லிமீற்றர் என்பன காணப்படுகின்றன. 

இவற்றை விட மிக நுண்ணிய அளவீடுகளை எடுப்பதற்கு மைக்ரோமீட்டர் மற்றும் நனோமீட்டர் எனபன பயன்படுத்தப்படுகின்றன.

ஒருநனோமீட்டர் என்பது ஒரு மீட்டரின் பில்லியனில் ஒரு பங்கு (1/1,000,000,000 or    1 nm = 0.000000001 meter)  அல்லது பகுதியாகக் காணப்படுகின்றது.

 இதனை மில்லிமீற்றரின் பகுதியாகக் கூறுவதாயின் மில்லிமீட்டரின் ஒரு மில்லியனில் ஒரு பகுதியாகும். 

நனோமீட்டரானது nmஎனும் அலகிலேயே அளக்கப்படுகின்றது பொதுவாக ஒரு மனிதர்களின் தலைமுடியானது 60000 நனோமீட்டர் தடிப்பையுடையது. 

அதேவேளை மனிதனுடைய மரபணு மூலக்கூறானது 2-12 நனோமீற்றர்களாகும்.

 இத்தகைய நனோ தொழினுட்பத்திற்கான முன்னோடிகளாக உரோமர்களே காணப்படுகின்றார்கள். 

இது பற்றிய எண்ணக்கூற்றை விஞ்ஞானரீதியாக முன்வைத்தவர் பௌதீகவியலாளரான றிச்சர்ட் பேமன் (Richard Feynman) என்பவராவர். 

நனோ தொழில்நுட்பம் என்ற சொல்லை முதன் முதலில் டோக்கியோ பல்கலைக்கழக அறிவியல்துறைப் பேராசிரியர் நொரியா தனிகுச்சி (Norio Taniguchi)  என்பவர் 1974 இல்  அறிமுகப்படுத்தினார்.  

1980 களின் பின்னர் நனோ தொழல்நுட்பம் வளர்ச்சியடையத் தொடங்கியது.

நனோ எனும் பெயரை தமது வர்த்தகப் பெயராகக் கொண்டிருக்கும் பெரும்பாலான உற்பத்திப் பொருட்கள் இவ்வாறு நனோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவையாகும். 

இலத்திரணியல் துறையைப் பொறுத்தவரை நனோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் ரான்சிற்றர்களின் வருகையால் தகவல் தொழில்நுட்பத்துறையில் பாரிய மாற்றங்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம். 

இதனால் நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசி, மற்றும் கணணிகள் கூட மிகவும் நுண்ணிய அளவில் தயாரிக்கப்படக்கூடும்.

    மேலும் நனோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் எந்தவொரு பொருட்களையும் நீண்டகாலத்திற்குப் பேணிப் பாதுகாப்பதற்கு உதவியாக அமைகின்றது.  

இவை தவிர விண்வெளி ஓடங்களில் நனோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இலத்திரணியல் பாகங்கள் மிகவும் நுண்ணியதாக அமைக்கப்படுகின்றன. 

இவை விண்வெளி ஓடத்தின் பாரத்தைக் குறைப்பதுடன் குறைந்தளவிலான இடத்தையும் உள்ளடக்குகின்றன.

  மருத்துவத்துறையைப் பொறுத்தவரை நனோ தொழில்நுட்பமானது பல்வேறு நன்மைகளை அளிக்கின்றது. 

இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மாத்திரைகளை உட்கொண்ட மறுகணமே வியாதி தீரக்கூடிய தன்மை காணப்படுகின்றது. 

அதுமட்டுமன்றி நனோ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் நுண்ணிய ரோபோக்களை உடலினுள் செலுத்தி நோய்கள் மற்றும் நோய்க்கலங்களைக் கண்டறியும் முயற்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன.

 உறுதிமிக்க கட்டடப் பொருட்கள் மற்றும் டயர்கள் என்பனவும் நனோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றன. 

இவ்வாறு பல்வேறு விதத்தில் வளர்ந்து வருகின்ற நனோ தொழில்நுட்பத்துறையில்  பல்வேறு விதமான ஆய்வுகளில் பல நிறுவனங்கள் தமது முதலீடுகளை இட்டுள்ளன.




இத்தகைய பல்வேறு நன்மை பயக்கின்ற நனோ தொழில்நுட்பத்தின் மூலம் அபாயங்களும் இல்லாமலில்லை. 

நனோ தொழில்நுட்பச் சாலைகளில் தொழில்புரியும் தொழிலாளர்களால் நனோ துணிக்கைகள் உள்ளெடுக்கப்படுவதனால் பாரிய அபாயங்களை ஏற்படுத்தலாம். 

ஏனெனில் நனோத் துணிக்கைகள் நச்சுத்தன்மையானவை. இவை மனிதனால் உள்ளெடுக்கப்படுகின்றபோது உயிராபத்தைக்கூட ஏற்படுத்தலாம்.

 மேலும் நனோ தொழில்நுட்பத்தின் மூலம் திறன்வாய்ந்ததும், பருமனில் சிறியதுமான ஆயுதங்களை தயாரிக்கமுடியும்.

 இது எதிர்காலத்தில் உலகரீதியாக பல்வேறு அச்சுறுத்தலை உண்டாக்குவதுடன் மனித குலத்தை அழிவடையச் செய்வதற்குரிய ஒரு மூலமாகவும் அமையும். 

எனவே எந்தவொரு நவீன கண்டு பிடிப்புகளும் பல்வேறு பயனுள்ளவையாக இருப்பதுடன், அவற்றிலிருந்து தீங்கு விளைவிக்கக்கூடிய தன்மைகளும் காணப்படுகின்றன. 

எனவே எந்தவொரு தொழில்நுட்பமும் மனிதனின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு சர்வதேச ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

samedi 18 février 2017

கடிதம்எழுதும் முறை

  1. அனுப்புனர், பெறுனர் பெயர், முகவரி குறிப்பிட வேண்டும்.
  2. யாருக்கு கடிதம் அனுப்பப்படுகின்றது என்பதைப் பொருத்து எப்படி அழைப்பது என்று முடிவு செய்து எழுத வேண்டும்.
  3. தலைமை ஆசிரியர், மேலதிகாரி, அரசு அதிகாரி என்றால் மதிப்பிற்குரிய ஐயா எனஅழைக்க வேண்டும். பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால் அன்புள்ள என அழைக்க வேண்டும். வேறு வெளியாட்களாக இருப்பின் அன்புடையீர் என அழைக்க வேண்டும்.
  4. கடிதத்தின் பொருள் என்ன என்பதை எழுத வேண்டும்.
  5. உள்ளடக்கம் - நாம் என்ன சொல்ல விரும்புகிறோமோ, அதை சுருக்கமாக எழுதிட வேண்டும்.
  6. இறுதியில் ஊர், நாள் ஆகியவற்றை கடிதத்தின் வலது மூலையில்எ ழுதிட வேண்டும்.
  7. இடது மூலையில் யாருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்பதைப்பொ றுத்து தங்களின் பணிவான, அன்பான, உண்மையான என்று எழுதிட வேண்டும்.
  8. தலைமை ஆசிரியர், மேலதிகாரி, அரசு அதிகாரி என்றால் தங்களின் பணிவான என நிறைவு செய்திட வேண்டும். பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால் தங்களின் அன்பான என முடித்திட வேண்டும். வேறு வெளியாட்களாக இருப்பின் தங்களின் உண்மையான என நிறைவு செய்திட வேண்டும்.

dimanche 15 janvier 2017

ஐந்திணை

சங்ககாலத் தமிழர் மலைப் 
பகுதியையும் காடுகள் அடர்ந்த பகுதியையும் வயல்கள் நிரம்பியபகுதியையும் கடலோரப்பகுதியையும் வறட்சியான வரண்ட பகுதிகளையும் தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் எனப்படுகின்றன. மலையும் மலை சார்ந்த நிலமும் – குறிஞ்சி காடும் காடுசார்ந்த நிலமும் – முல்லை வயலும் வயல் சார்ந்த நிலமும் – மருதம் கடலும் கடல் சார்ந்த நிலமும் – நெய்தல் மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் – பாலை மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி நிலம் என்று அழைத்தனர். மலைக்கு அடுத்து இருந்த நிலப்பகுதி காடும், காட்டைச் சார்ந்த இடமும். இப்பகுதியை முல்லைநிலம் என்று கூறினர். முல்லைக்கு அடுத்து இருந்த வயலும் வயலைச் சார்ந்த இடத்தை மருதம் என்று குறிப்பிட்டனர். பண்டைத் தமிழ்நாட்டின் கிழக்கும்,மேற்கும், தெற்கும் கடல் எல்லையாக இருந்தது. இந்தக் கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்றனர். பருவகாலத்தில், பெய்ய வேண்டிய மழை பெய்யாமல், வறட்சி ஏற்பட்டு, நிலம் பசுமை இல்லாமல் வரண்டு இருக்குமானால் அப்பகுதியைப் பாலை என்று சுட்டினார்கள்.